

மகன் அபகரித்துக் கொண்ட சொத்தை மீட்டுத்தரக் கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாய் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன் றது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கம்சலா (70). இவருக்கு இரு மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கம்சலாவின் மகன் பச்சையப்பன் என்பவர் தங்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கு அனைவரும் கையெழுத் திட வேண்டுமென தாய் மற்றும் சகோதரர், சகோதரிகளிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய குடும்பத்தினர் அனைவரும் அவர் காட்டிய தாளில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் பிறகு அவரது பெயரில் அந்த வீட்டை எழுதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்த வீட்டில் இருந்து கம்சலாவை பச்சையப்பன் விரட்டியுள்ளார். தற்போது, அவர் எந்தவித ஆதரவும் இல்லாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில், தனது சொத்தை அபகரித்துக் கொண்டு தன்னை முறையாக கவனிக்காத மகனிடம் இருந்து சொத்தை மீட்டுக் கொடுக்குமாறு கம்சலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் கம்சலா தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன் றார். அப்போது அவருடன், வந்த மகள் மற்றும் சிறுமி மீதும் மண்ணெண்ணெய் தெறித்தது. இதனைப் பார்த்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியதுடன் மூவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர், அவர்களை தனியாக அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர், கம்சலாவிடம் சொத்தை மீட்பது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.