

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. ஆட்சியர் விஷ்ணு, தேசிய கொடியேற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில், உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் ‘நோ ஃபுட் வேஸ்ட்’ திட்ட வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்திட்டத்துக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 9087790877 அறிமுகம் செய்யப் பட்டது. பத்தமடை பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த முத்துராமலிங்கம் என்பவர் கரோனா தொற்றால் இறந்ததையொட்டி தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி மேலாண்மை நிதியிலிருந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல வாரியம் சார்பில் ரூ.16 ஆயிரம் மதிப்பில் 3 பேருக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளையும், ரூ.12 ஆயிரம் மதிப்பில் 2 பேருக்கு இலவச தையல் இயந்திரங் களையும் ஆட்சியர் வழங்கினார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.38 ஆயிரம் மதிப்பில் 3 பேருக்கு அட்மா திட்டத்தின் கீழ் சிறந்த குழுக்களுக்கான பரிசு, 2 பேருக்கு இடுபொருள் விசைதெளிப்பான் கருவி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ. 9.35 லட்சம் மதிப்பில் 2 பேருக்கு பசுமை குடில் அமைக்க நிதி உதவி, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பாளையங்கோட்டை வட்டத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா ரூ.1000-க்கான மாதாந்திர விதவை உதவிதொகைக்கான ஆணை என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ. 35.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 197 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.