

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு கரோனாபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு டி பிரிவில் உள்ள ஒரு வீதியில் 4 வீடுகளைச் சேர்ந்த 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.