

ஒவ்வொரு பண்ணைக் குட்டையிலும் 20.75 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்கும் அளவில் அமைக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியை தீவிரப்படுத்துவது குறித்து அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்ற பயிற்சிக் கூட்டம் தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 579 ஊராட்சிகளில் 1,243 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியை ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த 12-ம் தேதி தொடங்கி வைத்தார். 1,243 பண்ணை குட்டைகளையும் செப்டம்பர் 9-ம் தேதிக்குள் அமைத்திட வேண்டும். ஒரே இடத்தில் அருகருகே பண்ணைக் குட்டைகளை அமைக்கக் கூடாது. பல இடங்களில் பரவலாக அமைக்க வேண்டும். நீளம், அகலம் போன்ற அளவுகள் சரியாக இருக்க வேண்டும்.
பண்ணைக் குட்டைகளுக்கு சென்று வர பாதுகாப்பான வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும். பணியாளர்கள்,இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்புடனும், கவனத்துடனும் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு பண்ணைக் குட்டைக்கும் குறைந்தபட்சம் 50 புகைப்படங்கள் மற்றும் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பண்ணைக் குட்டைக்கும் ஊராட்சி அல்லது கிராம பெயர்களுடன் தனித்தனி எண்கள் கொடுத்து காட்சிப்படுத்த வேண்டும். அனைத்து சான்றுகளிலும், அந்த எண்கள் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு பண்ணைக் குட்டைகளிலும் 20,75,258 லிட்டர் மழைநீரை தேக்கி வைக்கும் அளவில் இருக்க வேண்டும்” என்றார்.
இதில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் கள், வேளாண் துறை அலுவலர்கள், தோட்டக் கலைத் துறை அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் ஆகியோர் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். கூடுதல் ஆட்சியர் பிரதாப், வேளாண் இணை இயக்குநர் முருகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.