

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவரின் செயல்பாட்டைக் கண்டித்து துணைத்தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முட்டாஞ்செட்டி ஊராட்சித் தலைவராக கமல பிரியா உள்ளார். இவரது செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த துணைத்தலைவர் சபா ரத்தினம் மற்று கவுன்சிலர்கள் பாஸ்கரன், உம்ம ஹபிபா, கிருஷ்ணவேணி, சரவணன் ஆகியோர் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஊராட்சித் தலைவராக இருக்கும் கமல பிரியா, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறார். ஊராட்சி பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் போது, கமிஷன் பெறுவதற்காக, முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். ஊராட்சிக்கு எவ்விதமான நலத்திட்டங்களையும் செய்வதில்லை. எனவே, ஊராட்சித் தலைவர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதனைத் தொடர்ந்து எருமப்பட்டி போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புகார்கள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர்கள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.