கி.பி. 17-ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த நடுகல் : குண்டடம் அருகே கண்டுபிடிப்பு

கி.பி. 17-ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த நடுகல்  :  குண்டடம் அருகே கண்டுபிடிப்பு
Updated on
1 min read

தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே மோளரப்பட்டியில் நூற்றாண்டு பழமையான நடுகல்லை, அங்குள்ள மக்கள் வணங்கி வந்தனர். திருப்பூரைச் சேர்ந்த வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் அதன் நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஆய்வு மையத்தின் இயக்குநர் ரவிக்குமார் கூறியதாவது:

மோளரப்பட்டியில் புலி மற்றும் பன்றி குத்திப்பட்டான் நடுகல்லை ஆய்வு செய்தோம். கி.பி. 17-ம் நூற்றாண்டில் சுக்கல வருஷம் ஆடி மாதம் 18-ம் தேதி குருசாமி துரை பட்டத்தில் மோழரப்பட்டி, வெங்கட்ட நாயக்கர் மகள் ஆண்டியம்மாள் மக்கள் தூண் நட்டு, கம்புதட்டுகளால் பந்தலிட்டு நடுகல்லை வழிபட்ட செய்தியை நாம் அறிய முடிகிறது.

நடுகல் அமைப்பு

195 செ.மீ. அகலமும் 95 செ.மீ உயரமும் கொண்ட இந்த நடுகல்லின் இடதுபுறம் உள்ள வீரமறவன் தன் இடதுகையில் பன்றியின் வாய்ப்பகுதியை பிடித்து, தன் வலது கையில் உள்ள ஈட்டி மூலம் பன்றியின் தலைப் பகுதியை குத்தும் வகையிலும், தன் இடது தோளில் வில்லும், வலது தோளில் அம்புகள் வைப்பதற்கான கூடு வைத்துள்ளார். வலதுபுறம் உள்ள மாவீரன் தன் இடது கையில் புலியின் வலது காலை பிடித்து, தன் வலது கையில் உள்ள ஈட்டி மூலம் புலியின் முதுகுப் பகுதியைக் குத்தும் வகையிலும் வீரநடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பெண் தனது வலது கையை உயர்த்தி, அதில் பூவைப் பிடித்தபடியும், தனது இடது கையை தொங்கவிட்ட நிலையிலும் காணப்படுகிறார். வீரர்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதற்காக இரு பக்கமும் தீபம் வைப்பதற்காக வேல் போன்ற அமைப்பு உள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழ் மக்கள் நடுகல்லுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்ததை அறியமுடிகிறது. ஆய்வின்போது தொல்லியல் ஆர்வலர்கள் க.பொன்னுசாமி, ச.மு. ரமேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in