இளைஞர் கொலை: சக நண்பர்கள் இருவர் கைது :

இளைஞர் கொலை: சக நண்பர்கள் இருவர் கைது  :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் கொடுமுடி காட்டூரை சேர்ந்தவர் வரதராஜன். கொடுமுடியில் ஜோதிடம் மற்றும்பரிகார பூஜைகள் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். இவரதுஇரண்டாவது மகன் காளமேகப்பெருமாள் (எ) விஜயபிரகாஷ் (20), வெள்ளகோவிலில் வசித்து தனியார் பிஸ்கெட் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த மாதம்காளமேகப்பெருமாளின் பிறந்தநாளின்போது தந்தைவரதராஜன் வந்து பார்த்துள்ளார். அதன்பிறகு தினமும் தனது மகனிடம் பேசியும் வந்துள்ளார்.

கடந்த 8-ம் தேதி மதியம்உணவருந்த செல்வதாக காளமேகப்பெருமாள் கூறிவிட்டுசென்றபின், அலைபேசியில்யாரையும் தொடர்புகொள்ள வில்லை. இதில் சந்தேக மடைந்த வரதராஜன், வெள்ள கோவிலில் அவர் தங்கியுள்ள அறைக்கு சென்று பார்த்தபோது பூட்டப்பட்டிருந்தது.

அருகே விசாரித்த போது, கடந்த 8-ம் தேதி வெள்ளகோவில் கொங்கு நகரை சேர்ந்த நண்பர்கள் அஜித்குமார், ராஜா ஆகியோர் வந்து இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து நண்பர்களுடன் காளமேகப்பெருமாள் அடிக்கடி செல்லும்வெள்ளகோவில் வேப்பம்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் மதகு பகுதிக்கு சென்று பார்த்தபோது, கழுத்து பகுதியில் கூர்மையான பொருளால் வெட்டப்பட்டும், தலைப்பகுதியில் தாக்கப்பட்டும் காளமேகப்பெருமாள் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக வரதராஜன் அளித்த புகாரின்பேரில் வெள்ளகோவில் போலீஸார் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காளமேகப் பெருமாளுடன் பணிபுரிந்த ராஜா (19), அஜித்குமார் (19) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, கடந்த 8-ம் தேதி நண்பர்கள் மூவரும் அங்கு மதுஅருந்தியதும், அப்போது எழுந்த பிரச்சினையில் காளமேகப்பெருமாளை அடித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in