விருதுநகரில் நடந்த காவலர் தேர்வில் 1,350 பேர் தேர்ச்சி :

விருதுநகரில் நடந்த காவலர் தேர்வில் 1,350 பேர் தேர்ச்சி :
Updated on
1 min read

விருதுநகரில் நடைபெற்று வந்த தமிழ்நாடு சீருடைப் பணிக்கான தேர்வில் 144 பெண்கள் உட்பட 1,350 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தால் ஆயுதப்படை 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர்கள், 2-ம் நிலைக் காவலர், தீயணைப்பாளர்களுக்கான தேர்வு விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த 26-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றன. இதில் 2,228 ஆண்களும், 868 பெண்களும் பங்கேற்றனர்.

இவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் சுற்றில் தேர்வு பெற்ற 395 பெண்களுக்கு நேற்று 2-ம் சுற்றுத் தேர்வு நடைபெற்றது. அப்போது, நீளம் தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு நேற்று முன்தினத்துடன் தேர்வுகள் அனைத்தும் முடிக்கப்பட்டன.

இதில் 1,206 ஆண்களும், 144 பெண்களும் என மொத்தம் 1,350 பேர் தேர்ச்சி பெற்றனர். அடுத்த கட்டமாக இவர்களுக்கு நன்னடத்தை விசாரணை, மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும் எனக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in