

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, பொருளாளர் எஸ்.மல்லிகா ஆகியோர் அறிக்கை வாசித்தனர். அகில இந்திய துணைத் தலைவர்கள் உ.வாசுகி, சுதா சுந்தர்ராமன், மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி, செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும். சைல்டு லைன் திட்டத்தை மாற்றி அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நீக்குவதுடன், ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் மூடப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை திறந்து செயல்படுத்த வேண்டும். குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.