நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட திரவ யூரியா : ஈரோடு மாவட்டத்தில் அறிமுகம்

நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட திரவ யூரியா :  ஈரோடு மாவட்டத்தில் அறிமுகம்
Updated on
1 min read

இந்திய உழவர் உரக்கூட்டுறவு (இப்கோ) நிறுவனத்தின் சார்பில், திரவ வடிவிலான நானோ யூரியா உரம் ஈரோடு மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய வகை யூரியாவை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி அறிமுகம் செய்து வைத்து, மக்காச்சோள வயலில் செயல்விளக்கத்தைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:

இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனமான இப்கோ மூலம் நானோ தொழில்நுட்பத்தில், உலகின் முதல் நானோ உரமான, நானோ யூரியா தயாரிக்கப்பட்டுள்ளது. யூரியா உரத்திற்கு மாற்றாக, இந்த நானோ யூரியாவைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் விவசாயிகள் ஒரு மூட்டை (45 கிலோ) யூரியாவுக்குப் பதிலாக, ரூ.240 விலை கொண்ட வெறும் 500 மில்லி லிட்டர் திரவ யூரியாவைப் பயன்படுத்தினால் போதுமானது.

அனைத்து வகையான பயிர்களுக்கும், திரவ வடிவ நானோ யூரியாவை இலைமீது தெளிக்கலாம். இந்த திரவம் இலை முதல் வேர்வரையிலும் சென்று பயிர்களுக்கு தழைச்சத்தை அளிக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் 4 மில்லி லிட்டர் நானோ யூரியா கலந்து தெளித்தால் போதுமானது. இதனால் மண் மற்றும் நீர் மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன், அதிக மகசூலும் கிடைக்கும். ஈரோடு மாவட்டத்திற்கு முதல் தவணையாக 240 லிட்டர் நானோ யூரியா வரப்பெற்று, உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in