நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தடை எதிரொலியாக - ஆடி அமாவாசை தினத்தில் வெறிச்சோடிய தீர்த்தக் கட்டங்கள் : நீ்த்தார் கடன் நிறைவேற்ற முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
கரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயில்களில் வழிபாடு செய்யவும், நீர்நிலைகளில் புனித நீராடவும், திதி, பலி தர்ப்பணம் கொடுக்கவும் விதிக்கப்பட்ட தடை எதிரொலியாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு, கடல் உள்ளிட்ட முக்கிய தீர்த்தக் கட்டங்கள் வெறிச்சோடின. நீத்தார் கடன் நிறைவேற்ற முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆடி அமாவாசை நாளில் இந்துக்கள் கடல், ஆறு, குளம் மற்றும் புனித நீர்நிலைகளில் தங்கள் முன்னோர்களின் நினைவாக பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பலி தர்ப்பணத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்திலும் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா 3-வது அலை எச்சரிக்கையால் நடப்பாண்டும் ஆடி அமாவாசை தினத்தன்று நீர்நிலைகளில் திதி , பலி தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து தமிழக அரசு அறிவித்தது.
இதை தொடர்ந்து கன்னியாகுமரி, குழித்துறை தாமிரபரணி ஆற்றங் கரையோரப் பகுதிகளில் பலி தர்ப்பணத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் முந்தைய நாளன்றே கன்னியாகுமரி, குழித்துறை பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டு தடுப்புவேலி அமைக்கப் பட்டது. யாரையும் அப்பகுதிகளில் அனுமதிக்கவில்லை. கன்னியாகுமரி ரவுண்டானா பகுதிகளில் தடையை மீறி நேற்று காலையில் வந்த சிலர் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் முக்கடல் சங்கமம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
குழித்துறை தாமிரபரணி ஆற்றங் கரையில் குமரி மாவட்டத்தினர் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் திரளானோர் நேற்று பலிகர்ம பூஜைக்காக வந்தனர். களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை திருப்பி அனுப்பினர். தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பலி தர்ப்பணம் செய்யும் பகுதிகளிலும் போலீஸார் நேற்று முழுவதும் நிறுத்தப்பட்டிருந்ததால் தாமிரபணி ஆற்று பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. பழையாறு, சோழன்திட்டை அணை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைப் பகுதிகளில் சமூக இடைவெளியுடன் பலி தர்ப்பணம் நடைபெற்றது.
நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வேளிமலை முருகன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் போன்றவற்றில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
திருநெல்வேலி
வழக்கமாக ஆடி அமாவாசையின் போது லட்சக்கணக்கானோர் கூடும் காரையாறு சொரிமுத்தையனார் கோயிலும் நேற்று பக்தர்கள் வருகையின்றி அமைதியாக காணப்பட்டது. சிலர் புரோகிதர்களை வரவழைத்து தங்களது வீடுகளில் வைத்தும், நாங்குநேரி, அருகன்குளம் உள்ளிட்ட இடங்களில் புரோகிதர்களின் வீடுகளுக்கு சென்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் சங்குகுளி கடற்கரை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகள், ஏரல், ஆத்தூர், முறப்பநாடு, கருங்குளம் உள்ளிட்ட தாமிரபரணி நதியோர பகுதிகளிலும் தர்ப்பணத்துக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மக்கள் தங்கள் வீடுகளிலும், வீடுகளுக்கு அருகேயுள்ள சிறிய நீர் நிலைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
