

சிதம்பரம் காந்தி மன்றம் சார்பில் கரோனா விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
தமிழக அரசு ஆகஸ்ட் முதல் வாரத்தை கரோனா விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அரசு அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் காந்தி மன்றம் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வழியே கட்டுரைப் போட்டி நடத்தியது. "கரோனா பரவலைத் தடுப்பதில் மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 42 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் அண்ணாமலைநகர் ராணி சீதை மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ஜெ. பிரதிக்க்ஷா முதலிடமும், மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி கா. கோகிலா இரண்டாம் இடமும், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் பி.சோமஹரிஷ் 3-ம் இடமும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவர்களுக்கும் புத்தகப் பரிசுகள் மாணவர்கள் வீட்டிற்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று காந்தி மன்ற செயலாளர் கு. ஜானகிராமன் தெரிவித்தார்.