

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம் அருகே புள்ளுவிளையைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் மனைவி லில்லி (35), மகன்கள் லிஜோ (14), ஜிதின் (11) ஆகியோர், கடந்த 2 நாட்களுக்குமுன் வேளாங்கண்ணிக்கு காரில் சென்றனர். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவனந்தபுரத்துக்கு காரில் திரும்பினர். நேற்று அதிகாலை கூடங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த மினிலாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், லிஜோ (14), ஜிதின் (11) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லில்லி, கார் ஓட்டுநர் இஸ்கின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கூடங்குளம் போலீஸார் விசாரிக்கிறார்கள்.
திருநெல்வேலி மேலப்பாளை யத்தை சேர்ந்த முகமதுஷாலி மகன் முகம்மது இத்ரீஸ் (20). திருநெல் வேலியிலுள்ள பைக் ஷோரூமில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் பணிமுடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலப் பாளையம் வாய்க்கால் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாய்க்காலுக்குள் பாய்ந்தது. தலையில் பலத்த காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை திம்மராஜ புரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அந்தோணிமுத்து (58). கீழநத்தம் விலக்கில் சைக்கிளில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அந்தோணிமுத்து உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கிறார்கள்.