

மண்ணெண்ணெய் கிடங்கு காசாளரிடம் லஞ்சம் வாங்கியதாக வட்ட வழங்கல் பெண் அலுவலர், தனி வருவாய் ஆய்வாளர்உட்பட 3 பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் அமுதம் மண்ணெண்ணெய் கிடங்கு செயல்படுகிறது. இங்கு காசாளராக திருப்பூரை சேர்ந்த வெங்கடேஷ் பணிபுரிந்து வருகிறார். இவரிடம், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தின் மேல்தளத்தில் செயல்படும் வட்ட வழங்கல் துறை அலுவலகத்தில் பணிபுரியும் வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேணி, குடிமைப் பொருள் தனி வருவாய் அலுவலர் கோபிநாத், இடைத்தரகர் ஜெகன் ஆகியோர், மாதந்தோறும் தலா ரூ.800 வீதம் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில் மாவட்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், நேற்று நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ரூ.2400 பணத்தை தனி வருவாய் அலுவலர் கோபிநாத்திடம் வெங்கடேஷ் அளித்தார். அப்போது அங்கு மறைந்திருந்து கோபிநாத், கிருஷ்ணவேணி, ஜெகன் ஆகிய 3 பேரையும் காவல் துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் பிடித்தனர். பணத்தைபறிமுதல் செய்து நீண்ட நேர விசாரணைக்கு பிறகு 3 பேரையும் நேற்று இரவு கைதுசெய்தனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.