மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் - ஆடிமாதம் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு தடை :

மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் -  ஆடிமாதம் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு தடை :
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மணப்பாக்கம் கிராமத்தில் பாலாற்றங்கரையில் கன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆடி மாதத்தில்நேர்த்திகடன் செலுத்துவதற்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர்.

இந்நிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக நடப்பாண்டிலும், அம்மன் கோயில்களில் ஆடி மாத கூழ்வார்த்தல் போன்ற வழிபாடுகளை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனினும், பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கோயில்களில் சுவாமி தரிசனம்செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த கோயிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம், குடும்பமாக அமர்ந்து பொங்கலிட்டும் மொட்டையடித்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வழிபாடு செய்து வருகின்றனர்.

மேலும், மூலவருக்கு அர்ச்சனைகள் செய்யப்படுவதாலும் சிறப்பு தரிசனங்கள் அனுமதிக்கப்படுவதாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் சமூக இடைவெளியின்றி ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் வரிசையில் அணிவகுத்து பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி ‘இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. .

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், கரோனா தொற்று பரவும்அச்சம் இருப்பதால் இக்கோயிலில் ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால், மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், கோயிலுக்கு செல்லும் வழியில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி மக்களை திருப்பி அனுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in