

மேட்டூர் அருகே காவிரி ஆற்றுப் படுகையில் கருங்கல்லை வெட்டிக் கடத்திய வழக்கில், ஒருவரை போலீஸார் கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்த போலீஸார் மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோனூர் மேற்கு கிராமம் திப்பம்பட்டியில் காவிரி ஆற்றுப் படுகையில் கருங்கல் வெட்டிக் கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மேட்டூர் துணை ஆட்சியர் பிரபாத் சிங் கடந்த 3-ம் தேதி காவிரி ஆற்றுப் படுகைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள காவிரி ஆற்றுப் படுகையில் இரவு, பகலாக கருங்கல் வெட்டி கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து விஏஓ மைதிலி, வருவாய் ஆய்வாளர் நல்லதம்பியிடம், துணை ஆட்சியர் பிரதாப் சிங் விசாரித்தார். கருங்கல் கடத்தல் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு துணை ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதன்படி, வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி, கருங்கல் வெட்டி கடத்தியவர்கள் மீது கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணை மேற்கொண்டு, திப்பம்பட்டி காட்டுவளவைச் சேர்ந்த பூவேந்திரன் என்பவரை கைது செய்து, மேட்டூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், கருங்கல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்த போலீஸார் மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.