

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் கல்வி மையம் அமைக்கப்படவுள்ளதாக துணை வேந்தர் கா.பிச்சுமணி தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தில் 52-வது கல்விசார் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து துணைவேந்தர் பேசியதாவது:
தமிழ், தமிழர்களின் தொன் மையை கண்டறியும் வகையில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. இது போல் பாண்டியர்களின் முக்கிய துறைமுகமாக விளங்கிய கொற்கை பகுதியிலும் தொல்லியல்துறை அகழாய்வு செய்து வருகிறது.
கீழடியில் நடைபெற்ற அகழா ய்வுகளின்போது கிடைத்துள்ள தொன்மையான பொருட்கள் தொல்லியல்துறை மீது கவனத்தை ஈர்த்திருக்கிறது. தமிழர்களின் நகர நாகரிகம் இங்கு இருந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையயில் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் சார்ந்த கல்வி மையத்தை உரு வாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் புவி தொழில்நுட்பத்துறை, தமிழ்த் துறை, வரலாறு, சமூகவியல், வேதியியல், இயற்பியல், உயிரி தொழில்நுட்ப துறைகள், தமிழக தொல்லியல்துறையுடன் இணைந்து இக்கல்வி மையத்தை உருவாக்கவுள்ளது.
மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வியை மேம்படுத்துவதற்காக தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவும், உயர் தொழில்நுட்ப உபகரணங்களை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3.13 கோடியில் 11,950 சதுர அடி பரப்பில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் 10 புதிய பாடத்திட்டங்களை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டில் புதிதாக 5 படிப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.
தமிழியல் துறையில் 2021-2022-ம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த முதுகலை படிப்பு தொடங்க 51-வது கல்விசார் நிலைக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் கரோனா பரவலால் பாடத்திட்டக்குழு கூட்டப்படவில்லை. பாடத்திட்டக் குழு உறுப்பினர்கள் இணையவழி கூட்டத்தை விரும்பாத நிலையில் இப்படிப்பை அடுத்த ஆண்டு தொடங்க முடிவு செய்யப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டது.