

ஏற்காட்டுக்கு சுற்றுலா வரும் பயணிகள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் அல்லது கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியிருக்க வேண்டும். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் ஏற்காட்டுக்கு பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது: கரோனா தொற்று பாதிப்பில் தமிழகத்தில் 3-வது, 4-வது இடத்தில் இருந்த சேலம் மாவட்டம் தற்போது 8-வது இடத்துக்கு வந்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொது இடங்களில் மக்கள் நடமாட்டமும், வெளி மாவட்ட, வெளிமாநில மக்களின் வருகையும் அதிகரித்துள்ளது.
எனவே, மக்கள் அதிகமாக வந்து செல்லும் ஏற்காடு, கொங்கணாபுரம், தலைவாசல் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், ஏற்காட்டில் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்வது தெரியவந்தது. எனவே, ஏற்காட்டுக்கு சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.
மற்ற நாட்களில் ஏற்காடு வருபவர்கள் கரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். ஏற்காட்டைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து வந்து செல்லலாம்.
இதேபோல, கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக் கிழமைகளில் கூடும் சந்தைக்கும் தடை விதிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும். அதன் பின்னர் ஊரடங்கு தொடர்பாக அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாற்றங்கள் பின்பற்றப்படும்.
சேலம் மாவட்டத்தில் தற்போது வரை 10.50 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இது 30 சதவீதமாகும். இவ்வாறு அவர் கூறினார்.