

திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்கு தேவையான பல்வேறு வசதிகளை மாநகர காவல்துறை தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் செய்து கொடுத்துள்ளது.
இதுகுறித்து மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் ஜூலை 1-ம் தேதி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை நேரில் பார்வையிட்டு, முகாம்வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின், அங்கு சிறப்பு மருத்துவ முகாம், சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல், முகாம்வாசிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை, இலவச தொழிற்பயிற்சி முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன.
மேலும், முகாமில் சேதமடைந்திருந்த சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் புதிய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை சிறப்பாக செய்த கே.கே. நகர் காவல் நிலைய போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டுகளை தெரிவித்தார்.