ஈரோட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி - மீண்டும் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை : மாநகராட்சி ஆணையர் தகவல்

ஈரோட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி -  மீண்டும் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை  :  மாநகராட்சி ஆணையர் தகவல்
Updated on
1 min read

கரோனா பரவலைக் கண்டறியும் வகையில், ஈரோடு மாநகர் பகுதியில் மீண்டும் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள 300 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா இரண்டாவது அலையின்போது, வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் கண்டறியும் பணியில் 1500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக, கரோனா அறிகுறியுள்ளவர்கள் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்ததால், இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

கரோனா பரவலைக் கண்டறியும் வகையில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் மீண்டும் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மாநகராட்சி சார்பில் 300 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, அனைத்து வீடுகளுக்கும் தினமும் சென்று பரிசோதனை செய்வார்கள்.

கடந்த முறை இந்த பணிக்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த முறை மாநகராட்சி அலுவலர்கள் மட்டுமே செல்வார்கள். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in