

வாழப்பாடியில் கணவரை அடித்துக் கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
வாழப்பாடி அடுத்த தனூர்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி இளமதி (30). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இளமதி வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மணிகண்டன் சென்னை அரசு பூம்புகார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
மணிகண்டனுக்கு மது பழக்கம் இருந்தது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் ரத்த காயங்களுடன் மணிகண்டன் உயிரிழந்து கிடந்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற வாழப்பாடி போலீஸார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் மாலை தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் இளமதி வீட்டில் இருந்த கட்டையால் மணிகண்டனை தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இளமதியை போலீஸார் கைது செய்தனர். ‘மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டதால், கணவரை அடித்துக் கொலை செய்ததாக’ இளமதி போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதனிடையே நேற்று காலை மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழப்பாடி-பேளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ‘மணிகண்டனை, இளமதி அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளார். எனவே, கொலைக்கு உடந்தையாக இருந்த இளமதியின் ஆண் நண்பரை கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினர். இதையடுத்து, போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.