மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் ஒட்டுண்ணி வழங்க இந்திய கம்யூ. கோரிக்கை :

மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு செடி.
மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு செடி.
Updated on
1 min read

மரவள்ளிக் கிழங்கு பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலம் ஒட்டுண்ணி வழங்க வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டம், ஒன்றியக் குழு உறுப்பினர் பழனிசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் 500 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. மரவள்ளிக்கிழங்கை தாக்கும் மாவுப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த பவானிசாகரில் உள்ள வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக கடந்த காலங்களில் ஒட்டுண்ணி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஒட்டுண்ணி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதால், மரவள்ளிவிவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளுக்கு விலையில்லா ஒட்டுண்ணி வழங்குவதோடு, இழப்பீடும் வழங்க வேண்டும்.

செண்பகப்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருவதால், இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். நடுப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும், மாணவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதால் கூடுதலாக இரண்டு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.மோகன் குமார், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சி.நடராஜ், ஒன்றிய துணை செயலாளர் ஏ.கே. பொங்கியண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in