

மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழா ஆதீன மடத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.
விழாவில், தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்து, அருளாசி வழங்கி பேசியது: இப்பகுதி மக்களுக்கு கல்வி அறிவை புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், தருமை ஆதீனத்தில் 1938-ம் ஆண்டு குருஞான சம்பந்தர் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அதன்பின்னர், படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் பவளவிழா ஆண்டு தொடக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களுக்கு தமிழர் பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது என்றார்.
திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் ல முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது: கட்டண இ.ருப்பி திட்டத்தை இன்று (நேற்று) பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதில் அனைத்து ஆளுநர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். நான் ஆளுநர் மாளிகையில் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்பே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி அளித்திருந்ததால், பிரதமர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, ஆளுநர் மாளிகையில் இருந்து கலந்துகொள்ள வேண்டிய காணொலிக் காட்சியில் தருமை ஆதீனத்தில் இருந்து கலந்துகொண்டேன். தருமபுரம் மடம் ஆளுநர் மாளிகையாக மாறியது. இது சமயத்துக்கும், தமிழுக்கும் கொடுத்திருக்கிற பெருமை என்று நினைக்கிறேன். உண்மையாக, கடுமையாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநராக முடியும் என்பதை இந்து சமயம் எனக்கு சொல்லி கொடுத்தது. உழைக்க வேண்டும், படிக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என்று இறை வழிபாடுதான் சொல்லி கொடுத்தது. எனவே, மாணவிகள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பின்பற்றி உண்மையாக உழைத்தால், வாழ்வில் பெரிய இடத்தை அடைவதற்கு பலமாக இருக்கும்.
உலகத்தில் வளர்ந்த நாடுகளால் கூட கரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்க முடியாதபோது, இந்தியா தான் தயாரித்த தடுப்பூசியை உலக மக்களுக்கு கொடுத்தது. இந்தியாவும், தமிழகமும் இறைபூமி. நமக்கு தேவையானதை இறைவன் கொடுப்பான். கரோனாவில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறைவன் அருள் இருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடித்து, 3-வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா, எஸ்.பி சுகுணா சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.