

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் சேரும் குப்பைக்கழிவு களை வீதியில் கொட்டினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 3-வது அலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை வார விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அதன்படி, ஜோலார்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று தொடங்கி வைத்து, பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கைகளை முறையாக சோப்புப்போட்டு கழுவுவது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் அளித்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதையடுத்து, வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 32 மற்றும் 34-வது வார்டுகளில் ஆட்சியர் ஆய்வு நடத்தினார். அப்போது. ஒரு சில தெருக்களில் ஆங்காங்கே கொட்டப் பட்டும், குப்பைத்தொட்டியில் குப்பைக் கழிவு அகற்றப்படாமல் சுகாதாரச் சீர்கேட்டுடன் இருப்பதை கண்டு ஆட்சியர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக குப்பைக்கழிவுகளை அகற்றவும், வீடுகள், கடைகளில் சேரும் குப்பைக்கழிவுகளை வீதியில் கொட்டுவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டுகளில் ஆட்சியர் ஆய்வு நடத்தினார். குடியிருப்பு பகுதிகளை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நகராட்சி அதிகாரிகள் அதற்கான விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.