

சேலம் அடுத்த காடையாம்பட்டி வட்டாரத்தில் தென்னை மரங்களில் அதிகமாகக் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக காடையாம் பட்டி வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென்னை மரங்களில் அதிகரித்து வரும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி, தேன் போன்ற திரவ கழிவுகளை வெளியேற்றுவதால் கீழ் மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படர்ந்து ஒளிசேர்க்கை தடைபடுகிறது. இதனால், மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளை ஈக்கள் தென்னை, பாக்கு வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்
மஞ்சள் விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் மாலை வேளைகளில் 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிர செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். கிரைசொபெர்லா இரை விழுங்கிகள் வெள்ளை ஈக்களின் குஞ்சுகளை நன்றாக உட்கொள்ளுவதால் ஏக்கருக்கு 400 என்ற எண்ணிக்கையில் கிரைசொபெர்லா முட்டைகளை விட்டு, வெள்ளை ஈக்களை அழிக்கலாம்.
மேலும், என்கார்சியா ஒட்டுண்ணிகள், கூண்டு புழுக்கள் உள்ள தென்னை ஓலை துண்டுகளை எடுத்து, பாதிக்கப்பட்ட தென்னை தோப்புகளில் விட்டு வெள்ளை ஈக்களை கட்டுபடுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.