

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடற்பாசி சேர்த்த கேக், ரொட்டி, பிஸ்கட் தயாரிப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, மீன்பதனத் தொழில்நுட்பத்துறை இணைந்து நடத்திய இப்பயிற்சியில் 20 பெண்கள் பங்கேற்றனர்.
மீன்வளக் கல்லூரி முதல்வர் (பொ) என்.வி.சுஜாத்குமார் தொடங்கி வைத்தார். மீன்பதன தொழில்நுட்பத் துறைத் தலைவர் பா.கணேசன், மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைத் தலைவர் இரா. சாந்தகுமார் ஆகியோர் கடற்பாசியின் முக்கியத்துவம், கிடைக்கும் இடங்கள் மற்றும் கடற்பாசியில் இருந்து அடுமனை பொருட்கள் தயாரித்து தொழில் முனைவோராகும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். நிறைவு விழாவில் தமிழ்நாடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் தி.விஜயராகவன் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.