

இந்திய பருத்திக் கழகம் மூலமாக, 60 சதவீத பருத்தியை சிறு நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டுமென, மத்திய அமைச்சரிடம் தொழில்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய வர்த்தம், தொழில்துறை மற்றும் ஜவுளித் துறை அமைச்சரான பியூஸ் கோயலை, டெல்லியில்உள்ள அவரது அலுவலகத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவருமான ஏ.சக்திவேல் நேற்று சந்தித்து, ஏற்றுமதி தொழில் குறித்த தற்போதைய நிலவரம், கரோனாவுக்கு பிறகு ஆடை ஏற்றுமதி தொழிலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார்.
குறிப்பாக, ROSCTL உடனடியாக வழங்குவதற்கான செயல்பாட்டு முறைகளை அறிவிக்க வேண்டும். இந்த நிதி ஆண்டு வரை வட்டி சமநிலை திட்டத்தை நீட்டிக்க வேண்டும். RODTEP பயன்கள் EOU/SEZ நிறுவனங்கள் பெறவும், Advance Authorisation license பயனாளிகளுக்கு கிடைக்கவும்வழிவகை செய்ய வேண்டும். பருத்தி, நூல் ஏற்றுமதி வரவை உற்பத்தி செய்யும் மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதியைக் கொண்டு ஈடு செய்வதால், நூல் ஏற்றுமதியை தவிர்த்து அனைத்து நூல்களும் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கே கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
அதேபோல, இந்திய பருத்திக் கழகம் மூலமாக 60 சதவீத பருத்தியை சிறு நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டும். நூல் மற்றும் பருத்தி திடீர் விலை ஏற்ற, தாழ்வால் மதிப்புக் கூட்டு சங்கிலியில் உண்டாகும் சிக்கல்கள் உட்பட பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்தார்.
மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பு பலனளிப்பதாகவும், சாதகமான பதில் அளித்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் கூறும்போது, "அமைச்சரின் ஆற்றலாலும், உத்வேகத்தாலும் இந்த ஆண்டு ஏற்றுமதி வர்த்தகம் 400 பில்லியன் டாலர் அடையும்" என்றார். டெல்லியில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயலை, சந்தித்த இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.சக்திவேல்.