

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியக் குழு கூட்டத்தில் அதிமுக ஒன்றியக் குழு தலைவர் மீது திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அதிமுக ஒன்றியக் குழு தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்கணேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் மலர்விழி, கோபி, நித்யா, மோகன், சாஸ்தா, முத்துசாமி, காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றியக் குழு தலைவர் நிதி ஒதுக்கீடு குறித்து முறையான தகவல்களை தெரிவிக்க மறுப்பதாகவும், ஒருதலை பட்சமாக செயல்பட்டு முடிவுகளை எடுப்பதாகவும் குற்றம்சாட்டி திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம், ஒன்றியக் குழு தலைவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் வழங்கினர்.
தலைவர் மீது நம்பிக்கையில்லாததால், மீண்டும் ஒன்றியக் குழு தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.