

சேலம், ஈரோடு, கோபி டி.ஜி.புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி டி.ஜி.புதூர் மற்றும் ஈரோடு (காசிபாளையம்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக் மோட்டார் வாகனம், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கன்டிசனிங் டெக்னீசியன் ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில் சேரலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் தொழிற்பிரிவிலும் அரசு இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் பெற ஆகஸ்ட் 4-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், (www.skilltraining.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகலாம்.
கட்டணமில்லா பயிற்சியுடன், தமிழக அரசால் மாதம் ரூ.750 உதவித் தொகை, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஆகிய சலுகைகள் வழங்கப்படும், என மாவட்ட நிர்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர் ராஜகோபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 2021-ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 4-ம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும், என்றும் மேலும், விவரங்களுக்கு 0427 – 2401874, 94436 29621 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம், என்றும் தெரிவித்துள்ளார்.