

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளஅரசர்குளம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ஹரிராஜ்(17). இவர், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
தொடக்கப் பள்ளியில் இருந்து ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் கொண்ட இவர்,வீட்டின் வரவேற்பறையில், சுவற்றில் இயற்கை காட்சியை பெயின்ட் மூலம் வரைந்திருப்பது அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. ஓவியம் வரைவதில் தேசிய அளவில் சாதித்துள்ள இவர், தற்போதை காலகட்டத்துக்கு ஏற்ப படைப்புகளை டிஜிட்டலாக்கி வருவதால் உழைப்பு வீண்போகாது என நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்.
இது குறித்து மாணவர் ஹரிராஜ் கூறியது: எனது தந்தையும் ஒரு ஓவியர் தான். அவரிடம் இருந்து 3-ம் வகுப்பு படிக்கும் போதே ஓவியம் வரைய கற்றுக்கொண்டேன். நான் 6-ம் வகுப்பு படித்தபோது ஓவிய ஆசிரியர் ஜேம்ஸ்பாண்ட், எனக்கு வழிகாட்டினார். இதனால் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளேன். மாணவர்களிடையே கலை, பண்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு அரசு சார்பில் நடத்தப்பட்ட கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தேன்.
தற்போது, வாழை இலையில் இந்திய அரசின் லோகோவை வரைந்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' எனும் தேசிய அளவிலான சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளேன். எத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும் பாதிப்பில்லாத வகையில் இருப்பதற்காக எனது ஓவியத்தை டிஜிட்டலாக்கி வருகிறேன். மேலும், நுண்கலை ஓவியத்தை கற்று, சர்வதேச அளவில் சாதிப்பேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் மாணவர் ஹரிராஜ்.