

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செட்டிக்குளம், குரூர், பொம்மனப்பாடி, புது விராலிப்பட்டி, பழைய விராலிப்பட்டி, மங்கூன், நாட்டார்மங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களிலிருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். 20-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு வரும் புறநோயாளிகளின் வசதிக்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளாகத்தில் கட்டப்பட்ட 2 கழிப்பறைகள் தண்ணீர் வசதியில்லாமல் 2 ஆண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, பூட்டிக்கிடக்கும் கழிப்பறைகளை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.