

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் கார் பருவத்தில் சுமார் 3,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பயிர் நடவு முதல் பூக்கும் பருவம் வரை பல்வேறு நிலைகளில் உள்ளது. வளர்ச்சி பருவத்தில் உரிய நேரத்தில் உரம் இடுதல் மிகவும் அவசியமாகும்.
நெற்பயிரின் வளர்ச்சி பருவங்களில் மிகவும் முக்கியமானது தூர் கட்டும் பருவமாகும். மகசூல் அதிகரிக்க உரிய தருணத்தில் மேலுரம் இடுதல் வேண்டும்.
குறுகிய கால நெற்பயிரில் 15 முதல் 20 நாட்களிலும், மத்திய கால நெற்பயிரில் 20 முதல் 25 நாட்களிலும் தூர் கட்டும். இக்காலகட்டத்தில் குறுகிய கால நெற்பயிருக்கு ஏக்கருக்கு யூரியா 26 கிலோ மற்றும் பொட்டாஷ் 25 கிலோவும், மத்திய கால நெற்பயிருக்கு ஏக்கருக்கு யூரியா 32 கிலோவும், பொட்டாஷ் 31 கிலோவும் மேலுரமாக இடுதல் வேண்டும். இதனால், தூர்கள் விரைந்து நன்கு வளரும்.
இதே அளவு உரத்தை பூங்குருத்து உருவாகும் பருவம் மற்றும் பொதி பருவத்தில் இடுதல் வேண்டும். மேலுரம் இடும்போது ஒரு பங்கு யூரியாவுடன் ஜிப்சத்தை 3 பங்கு கலந்து இட வேண்டும்.
அப்போதுதான், யூரியாவிலுள்ள தழைச்சத்து பூக்கள் மலர்ந்து, நெல் மணியாக மாறி எடை அதிகரித்து விளைச்சல் அதிகமாக வழிவகுக்கும்.
எனவே, மேற்கண்ட தொழில் நுட்பங்களை கடைபிடித்து விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.