

சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த 11 இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
கொத்தட்டை கிராமத்தில் வசித்து வந்த இந்த இருளர் மக்களை விரட்டியடித்து விட்டு, சிலர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். இருளர் மக்கள் வீட்டு மனைகள் இல்லாமல் அதே ஊரில் சில இடங்களில் நாடோடிகள் போல் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் அப்பகுதியில் உள்ள இருளர் சமூக மக்கள் அப்போது இருந்த சிதம்பரம் கோட்டாட்சியரிடம் இதுதொடர்பாக மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இருளர் சமூக மக்கள் மீண்டும் நேரில் சந்தித்து, ஆக்கிரமித்துள்ள வீட்டுமனையை மீட்டு தரவேண்டும் என்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து எடுத்த நடவடிக்கையின் பேரில், நேற்று சம்பந்தபட்ட இருளர் சமூக மக்களுக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் 11 குடும்பங்களுக்கு பட்டா வழங்கினார்.