

தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் வெற்றிபெற்ற துரைமுருகன், தற்போது நீர்ப்பாசனத் துறை அமைச்சராக உள்ளார். துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து, அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். 745 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றுள்ளதால் தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இதேபோல, விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வெற்றியைஎதிர்த்து திமுக வேட்பாளர் எம்.பழனியப்பனும் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைவிட விஜயபாஸ்கர் கூடுதலாக செலவு செய்து வெற்றி பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாருக்கு எதிராக, அவரைஎதிர்த்து திமுக சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கேகேசி பாலு தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு இந்த தேர்தல் வழக்குகள் நேற்றுவிசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதி,இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், இந்தியதேர்தல் ஆணையம், தமிழகதலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் 4 வாரங்களில் பதில்அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.