

திருப்பூர்: பல்லடம் அருகே செல்போன் மூலம் ஆர்டர் எடுத்து, வீடு வீடாக சென்று சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர், கரடிவாவி சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஊடகம் என ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 6 லிட்டர் சாராயம் இருந்தது.
விசாரணையில், அவர் கோவை மாவட்டம் வதம்பச்சேரியை சேர்ந்த சுந்தர்ராஜன்(35) என்பதும், வீட்டில் சாராயம் காய்ச்சி விற்றதும் தெரியவந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் செல்போனில் தொடர்புகொண்டு முகவரி தெரிவித்தால் வீடுகளுக்கே சென்று பாட்டிலில் சாராயம் வழங்கியுள்ளார். அவரது வீட்டில் சுல்தான்பேட்டை போலீஸார் சோதனை நடத்தியதில், 70 லிட்டர் ஊறலும், மூன்றரை லிட்டர் சாராயமும் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக, காவல்துறையினர் கூறும்போது, “வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றியதாக சுந்தர்ராஜன் தெரிவித்தார். விசாரணையில் அது உண்மையல்ல என தெரியவந்தது. போலியாக ‘ஊடக ஸ்டிக்கர்’ ஒட்டிக்கொண்டு, சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளார்” என்றனர்.
காமநாயக்கன்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து, சுந்தர்ராஜனை கைது செய்தனர்.