

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டால் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்த முடியாமல் 4,000 பேர் தவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை முதல் மற்றும் இரண்டாவது தவணையாக 3.50 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒன்று முதல் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணையை செலத்திக் கொண்டவர்கள், தற்போது நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே முதல் தவணை தடுப்பூசி போட்டு 28 நாட்கள் முடிந்தவர்களுக்கு, அடுத்த 5 நாட்களுக்குள் 2-வது தவணை செலுத்திக் கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதையடுத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சென்று தடுப்பூசி வந்துவிட்டதா என பலர் கேட்கின்றனர். ஆனால் போதிய தடுப்பூசி இருப்பில் இல்லை என்றே பதில் வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை கோவாக்சின் தடுப்பூசிக்காக 4,000 பேர், 28 நாட்களை கடந்து 3 வாரங்களாக காத்திருக்கின்றனர். காலம் கடந்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்தினால் எதிர்பார்த்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காதோ என்றும் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பொற்கொடியிடம் கேட்டபோது, கடந்த 10 நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி வரவில்லை. போதிய அளவு தடுப்பூசி மருந்துகள் வந்த பின்னரே முதல் தவணை செலுத்திவிட்டு காத்திருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். கோவாக்சின் தடுப்பூசி போட்டு 28 நாட்கள் முடிந்த பின், அதன் பின்னர் ஒரு மாதம் வரை கூட இரண்டாவது தவணை பூஸ்டரை போட்டுக் கொள்ளலாம் என்று கூறினார்.