

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை அடுத்துள்ள வெளிப்பிரிங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி(58). இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு விற்றுவிட்டு, அதே சிமென்ட் ஆலையில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு கோவிந்தசாமி ஆலையில் பணிபுரிந்தபோது நேரிட்ட விபத்தில், அவரது கழுத்து பகுதியில் படுகாயம் அடைந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், அவரது மகனுக்கு சிமென்ட் ஆலையில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆலையின் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.