டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.53.40 கோடியில் நடைபெறும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய மேம்பாட்டு பணியை, ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பெ.கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள். படம்: என்.ராஜேஷ்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.53.40 கோடியில் நடைபெறும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய மேம்பாட்டு பணியை, ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பெ.கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் 132 ஏக்கர் பரப்பளவில் உள்ள சி.வ.குளத்தை ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தும் பணி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.53.40 கோடியில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய மேம்பாட்டு பணி ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்தோம். முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. அதை விரைவாக முடிக்கும் பொருட்டு பல்வேறு இடங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. போக்குவரத்து துறையில் இருந்து இடம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் தாமதமாகிவிட்டன. தற்போது இடம் கிடைத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் திமுக அறிக்கையில், சில நகரங்கள் மாநகராட்சியாகவும், சில இடங்கள் நகராட்சியாகவும் தரம் உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் அறிவித்த பின்னர், சுழற்சி முறை இட ஒதுக்கீடு முறைப்படுத்தி, பருவமழைக்காலம் முடிந்தவுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். திருச்செந்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றார் அவர்.

அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பெ.கீதாஜீவன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன், மாநகராட்சி ஆணையர் சாருமற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in