சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரியில் - ரூ.80 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் : கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தகவல்

சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை கோவை மேற்கு மண்டல் ஐஜி சுதாகர் பார்வையிட்டார். உடன் டிஐஜி மகேஸ்வரி, எஸ்பி  அபிநவ் உள்ளிட்டோர்.
சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை கோவை மேற்கு மண்டல் ஐஜி சுதாகர் பார்வையிட்டார். உடன் டிஐஜி மகேஸ்வரி, எஸ்பி  அபிநவ் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த இரு நாட்களில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 8,039 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தெரிவித்தார்.

சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்து, சேலம் எஸ்பி அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

இத்துப்பாக்கிகளை கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேற்று (24-ம் தேதி) ஆய்வு செய்தார். பின்னர் சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சேலம் சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் உரிமம் இல்லாத துப்பாக்கிகள் தொடர்பாக கடந்த 15 நாட்களாக தீவிர சோதனை நடத்தப்பட்டன. இதில், 52 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 29 நாட்டுத் துப்பாக்கிகளை அதை பயன்படுத்தியவர்கள் தானாக முன்வந்து ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்குகளில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு நாட்கள் நடந்த சோதனையில், ரூ.80 லட்சம் மதிப்பிலான 8,039 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இத தொடர்பாக 517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 2,000 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்பனையை முழுமையாக தடுக்கும் வகையில் மாநில எல்லைப் பகுதியில் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையம் அமைக்கப்பட்டதன் மூலம் இதுவரை 107 மனுக்கள் நேரடியாகவும், 47 அழைப்புகள் 181 இலவச தொலைபேசி வாயிலாகவும், 1098 மூலம் 56 அழைப்புகளும் வந்துள்ளன. சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 878 இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த ஒன்றரை மாதத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in