

தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.168 கோடி முதலீட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ), குடிசை மாற்று வாரியம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஊரக தொழில் துறை மற்றும் குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 6 பேருக்கு ரூ.61.42 லட்சத்தில் மானியக் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியது:
கரோனாவால் தொழில் பாதிப்பு ஏற்படாதிருக்க இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 4 தவணைகளாக வழங்க வேண்டிய முதலீட்டு மானியம் ரூ.168 கோடி ஒரே தவணையாக வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் வரை தொழிலாளர் வரி வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வங்கிக் கடனுக்கான தவணையை உடனே செலுத்த நிர்பந்திக்கக்கூடாது எனவங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஊரக தொழில் துறை செயலாளர் அருண்ராய், ஆட்சியர் கவிதா ராமு, குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்தராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.