

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.14.70 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக, சேலத்தில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு 3 தவணையாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 7 பயனாளிகளுக்கு சேர வேண்டிய ரூ.14.70 லட்சம் வழங்காமல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தினார்.
அதில், சேலம் மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்த துரைசாமி, வெற்றிவேல், ராதாகிருஷ்ணன், கருங்கல்பட்டி சிவக்குமார், பாக்கியம், மல்லிகா, ரோசிலின் ஆகிய 7 பேர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டதும், அவர்களுக்கு தர வேண்டிய தலா ரூ.2.10 லட்சத்தை வழங்காமல் மோசடி நடந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயமாலா, சரவணன், சீனிவாசன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.