

சேலம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சேலம் கொண்டப்பநாய்க்கன்பட்டி ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா நகர், தாமரை நகர், டெலிபோன் காலனி உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றுகூறி அப்பகுதி பெண்கள், காலிக்குடங்களுடன் நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது பெண்கள் கூறியதாவது:
சத்யா நகர், டெலிபோன் காலனி, தாமரை நகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிநீர் இல்லாததால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்கும் செல்ல முடியவில்லை. எனவே, முறையாக குடிநீர் வழங்க வேண்டும், என்றனர்.
தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக்கூறினர். இதையடுத்து, பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.