சேலம் மாநகராட்சியில் - நிலுவைச் சம்பளத்தை வழங்க ஊழியர்கள் கோரிக்கை :

சேலம் மாநகராட்சியில் -  நிலுவைச் சம்பளத்தை வழங்க ஊழியர்கள் கோரிக்கை :
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு மாத நிலுவை சம்பளத்தை வழங்க ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாநகராட்சி மைய மற்றும் மண்டல அலுவலகங்களில் அலுவலக பணியாளர்கள், பொறியாளர் பிரிவு, சுகாதாரப் பிரிவு, தெருவிளக்கு பராமரிப்பு, நகர திட்டமைப்பு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.

மாநகராட்சி பணியாளர்களுக்கு கடந்த மே, ஜூன் ஆகிய இரண்டு மாத சம்பளம் வழங்கப்படாமல், நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் காலதாதமாக மாநகராட்சி நிர்வாகம் சம்பளம் வழங்கி வந்த நிலையில், தற்போது, இரண்டு மாத சம்பளம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளது.

மேலும், ஆண்டு தோறும் ஆடி மாதம் கொண்டாடப்படும் மாரியம்மன் பண்டிகைக்காக, மாநகராட்சி பணியாளர்களுக்கு முன் பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். தற்போது, முன் பணமும் வழங்கப்படாத நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் சிரமத்துக்குள்ளாகி வருவதாக வேதனை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் கூறியது:

மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று காலத்தில் முன்களப் பணியாளராக ஒவ்வொரு ஊழியரும் பணிபுரிந்து வருகிறோம். ஆனால், மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. கடந்த இரு மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. மேலும், ஆடி பண்டிகைக்காக வழங்கப்படும் சம்பள முன் பணமும் வழங்கவில்லை. இதனால், சிரமத்தில் உள்ளோம். எனவே, மாநகராட்சி நிர்வாகம் நிலுவைச் சம்பளம் மற்றும் முன் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in