குடிநீர் உப்பு நீராக இருப்பதால் பெருங்களூர் மக்கள் அவதி :

குடிநீர் உப்பு நீராக இருப்பதால் பெருங்களூர் மக்கள் அவதி :
Updated on
1 min read

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பெருங்களூர் முதல்நிலை ஊராட்சியில் 17 குக்கிராமங்கள் உள்ளன. மானாவாரி விவசாயப் பகுதியாக உள்ள இவ்வூராட்சியில் 2,000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 2 குக்கிராமங்களைத் தவிர ஏனைய 15 கிராமங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரானது உப்பாக உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் வாகனங்களில் கொண்டு வரப்படும் நல்ல தண்ணீரை குடம் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து பெருங்களூரைச் சேர்ந்த பெண்கள் கூறியது: எங்கள் பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீர் உப்பாக இருப்பதால், குடிக்க பயன்படுத்த முடியவில்லை. இதனால், எங்கள் பகுதிக்கு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிப்போரிடம் இருந்து தினமும் குடிநீர் வாங்குவதற்கே தினமும் ரூ.50-ல் இருந்து ரூ.100 வரை செலவிடுகின்றோம். கூலி வேலைக்கு சென்றாலும் நாளொன்றுக்கு ரூ.100தான் கிடைக்கும். இந்த தொகையும் குடிநீர் வாங்குவதற்கே பயன்படுத்த வேண்டியுள்ளது.

எனவே, உப்புத் தன்மை இல்லாத பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தரமான குடிநீர் விநியோகிக்க வேண்டும். அல்லது, ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர் கூறியது:

ஊராட்சியில் நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து ஆழ்துளை கிணறுகளை அமைத்துத் தரக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in