

திருநெல்வேலி காந்திமதியம்மன் சமேத நெல்லையப்பர் கோயிலில் பவித்ர உத்ஸவம் நேற்று நடை பெற்றது. கோயில்களில் நடத்தப் படும் பூஜைகளில் அறிந்தோ, அறியா மலோ குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவ்வித குறைபாடுகள் நீங்கி ஓராண்டுக்கு நடத்தப்பட்ட பூஜைகளின் சம்பூர்ண பலன் உண்டாகி, ஆன்மாக்கள் இம்மை, மறுமை பயன்களை அடைய வேண்டும் என்பதற்காக ஆண்டுக்கு ஒருமுறை நடை பெறும் பெருஞ்சாந்தி வைபவம் பவித்ர உத்ஸவம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதையொ ட்டி காலை 11 மணியளவில் சுவாமி ,அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு கும்பம் வைத்து, ஹோமம் வளர்த்து அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இரவு 7 மணி அளவில் கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.