தொலைபேசி ஒட்டுக் கேட்பு சம்பவத்தால் - இந்தியாவின் பாதுகாப்பே கேள்விக்குறி ஆகிவிட்டது : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தொலைபேசி ஒட்டுக்கேட்பு சம்பவம் தொடர்பாக சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு சம்பவம் தொடர்பாக சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
Updated on
1 min read

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் பாதுகாப்பே கேள்விக்குறி ஆகிவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களை சத்தித்தபோது கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும், பாதுகாப்புக்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை பாஜகவின் மோடி அரசு மூடி மறைக்கிறது. இதைக் கண்டு மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். இல்லை என்றால் நாடு அடிமைப்படுத்தப்பட்டுவிடும்.

இஸ்ரேல் நாட்டின் மென்பொருளைக் கொண்டு நமது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகங்கள் என சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. எங்கள் தலைவர் ராகுல்காந்தியின் பேச்சும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. நமது நாட்டு ராணுவ ரகசியங்கள் கூட கண்காணிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சதி திட்டத்துக்கு மோடி அரசாங்கம் துணை போயுள்ளது. இந்தியாவின் 3 முக்கிய உளவு அமைப்புகளுக்குக் கூட இது தெரியவில்லை. ஆனால், நமது உள்துறை அமைச்சருக்கு தெரிந்திருக்கிறது. பிரதமருக்குத் தெரிந்து இருக்கிறது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது? அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து ஒருவெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் இன்று சென்னையில் எனது தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கிபேரணி செல்ல உள்ளோம். அரசு அனுமதி தந்தாலும், தராவிட்டாலும் பேரணி நடக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in