

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட சில மீனவ கிராமங்களில் சுருக்கு மடிவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின் றனர். தமிழக அரசு இந்த வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் இந்த வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க மாவட்டநிர்வாமும் தடை விதித்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கடந்த 19ம் தேதி தேவனாம்பட்டினம் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதிகோரி தேவனாம்பட்டினத்தில் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், கூடுதல் ஆட்சியர் (வருவாய்)ரஞ்சித் சிங், கூடுதல் ஆட்சியர் (ஊரகவளர்ச்சி) பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் கடலூர் துறைமுகத்துக்கு சென்றனர். அங்கிருந்த வலைகள், படகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் படகில் கடல் வழியாக சிதம்பரம் அருகே பிச்சாவரத்துக்கு அருகில் உள்ள எம்ஜிஆர் திட்டு வரை சென்றனர். மழைகாலங்களில் கடற்கரை பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.