

மேட்டூர் அணை பூங்கா சாலையில் அதிகரித்து வரும் சிறு கடைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் அணையையொட்டி, 33 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் ஏராளமான மரங்கள், பூச்செடிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், பரந்த புல்வெளி, பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் 4 மான்கள் உள்ளிட்டவை உள்ளன.
பூங்காவில் வார விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் வருகை அதிகம் இருக்கும். கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின்னர் பூங்கா தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் சுற்றுலா செல்ல முடியாமல் இருந்த மக்கள் அணை பூங்காவுக்கு தற்போது அதிக அளவில் வருகின்றனர்.
இந்நிலையில், அணை பூங்கா அமைந்துள்ள சேலம்- மைசூரு சாலையில் நாளுக்கு நாள் சிறுகடைகள் மற்றும் வாகனங்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் பயணிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள் சிலர் கூறியதாவது:
மேட்டூர்அணை பூங்கா அமைந்துள்ள சாலையில், நாளுக்கு நாள் சிறுகடைகள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. சாலை வளைவு உள்ள இடத்தில் பூங்கா நுழைவு வாயில் உள்ளது. இங்கு பேருந்துகள் நின்று செல்லும் நிலையில், சாலையோரத்தில் சிறுகடைகள் அதிக எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் திண்டாடுகின்றனர்.
மேலும், பேருந்துக்காக சாலையின் மறுபுறம் செல்லும்போது, வளைவான சாலையில் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்துகளும் ஏற்படுகின்றன. பூங்கா நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்தையொட்டியும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதால், நுழைவுச் சீட்டு பெறுவதற்கான இடம் எங்குள்ளது என்பதை அறிய முடியாமல் பயணிகள் திணறுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.