கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் - நிலக்கடலை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் : ஊடுபயிராக துவரை விதைப்பு

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் -  நிலக்கடலை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்  :  ஊடுபயிராக துவரை விதைப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரீப் பருவத்தில் ஆடிப்பட்டத்திற்கு ஏற்ற பருவமழை தற்போது பெய்து வருவதால், மானாவாரி பயறு வகைகளான உளுந்து, காராமணி, பச்சைப் பயறு, துவரைப் பயிர்களும், எண்ணெய்வித்துப் பயிரான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக நிலக்கடலை சாகுபடியில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் நிலக்கடலை விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, மானாவாரி பயிரான நிலக்கடலை 14 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

மழையை மட்டுமே நம்பி, ஜூன், ஜூலை மாதங்களில் நிலக்கடலை விதைக்கப்படும். தொடர்ந்து ஆக்ஸ்ட் மாதங்களில் பொழியும் பருவமழையினை கொண்டு நிலக்கடலை செடிகள் அறுவடைக்கு தயாராகும். இதன் மூலம் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படும். செக்கு மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளதால், நிலக்கடலை தேவையும் அதிகரித்துள்ளது.

ஈடுகட்டும் துவரை

கடந்த ஆண்டு போதிய மழை பொழிவு இல்லாததால், நிலக்கடலை சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் விதைப்புக்காக நிலக்கடலை எடுத்து வைக்க முடியவில்லை. தற்போது ஒரு படி விதைப்பு நிலக்கடலை ரூ.160-க்கு விலைக்கு வாங்கி ஏர் உழுது விதைத்து வருகிறோம். நிலக்கடலையில் இழப்பு ஏதும் ஏற்பட்டால், ஊடுபயிரான துவரை சாகுபடியில் ஈடுகட்ட முடியும். தற்போது தொடர்ந்து பெய்யும் மழையால் நிலக்கடலை விளைச்சல் கைக்கொடுக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் விவசாயிகள் பலர் ஊடுபயிராக துவரையும் விதைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in