வெள்ளகோவிலில் போலி ஆவணங்களால் பெறப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் - வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரிக்கை :

வெள்ளகோவிலில் போலி ஆவணங்களால் பெறப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில்  -  வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரிக்கை :
Updated on
1 min read

வெள்ளகோவில் பகுதியில் சொந்த வீடு இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட 20 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த மனைகளை தகுதியுள்ள, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ச.கருப்பையா, காங்கயம் வட்டாட்சியர் பி.சிவகாமியிடம் நேற்று அளித்த மனுவில், "திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் உப்புப்பாளையம் பகுதியில், 2007-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 61 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இந்த 61 பேரில் வெள்ளகோவில் பகுதியில் சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டதாகக் கூறி, உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப்புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, 2008-ம் ஆண்டு அப்போதைய ஆதிதிராவிடர் நலத் துறை காங்கயம் தனி வட்டாட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, 61 பட்டாக்களில் 20 பேர் சொந்தமாக வீடு வைத்திருந்து, போலியான ஆவணங்கள் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றது தெரியவந்தது. அதன்பிறகு, அந்த 20 பேரின் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டன.

இதுதொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என தொடர்புடைய அதிகாரிகள் வாக்குறுதியளித்திருந்தனர்.

இருப்பினும், கடந்த 12 ஆண்டுகளாக மேற்குறிப்பிட்ட 20 வீட்டுமனைப் பட்டாக்களை சொந்த வீடு இல்லாமல், வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த 20 பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, இப்பிரச்சினையில் வட்டாட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி, காலியாக உள்ள 20 வீட்டுமனைப் பட்டாக்களை, உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப்புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத தலித் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in